.webp)
-551174.jpg)
Colombo (News 1st) கிரிந்த கடற்கரையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
345 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் நேற்று(12) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கிரிந்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேகநபரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் உரிமையாளர் என கருதப்படும் 'ரன்மல்லி' என அழைக்கப்படும் ரன்உலுகே சரித் சந்தகெலும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக என்பவரின் உதவியாளராவார்.
கடந்த மார்ச் 20ஆம் திகதி ரன்மல்லி என்பவருக்கு சொந்தமான 46 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் திக்வெல்ல ஊருகமுவ பகுதியில் வைத்து சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண பொலிஸ் மாஅதிபர் கித்சிரி ஜயலத் தெரிவித்துள்ளார்.
