.webp)
-551034.jpg)
Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நடத்திச் செல்வதற்கான இயலுமை இல்லையென பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆடசேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(10) நிராகரித்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கின் பூர்வாங்க விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் நீதிபதி திகதி நிர்ணயித்தார்.
2014 நவம்பர் 19ஆம் திகதி 11 பத்திரிகைகளில் மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான விளம்பரத்திற்கு இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தியமையால் அரசாங்கத்திற்கு 17 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளமையால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் 15 பேர் சாட்சிகளாகவும் 21 ஆவணங்கள் வழக்கு சான்றுப் பொருட்களாகவும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
