.webp)

Colombo (News1st) 2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமானதுடன் அடுத்த மாதம் 05 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
2362 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சையில் இம்முறை பரீட்சையில் 340,525 பேர் தோற்றுவதுடன் இவர்களில் 246, 521 பாடசாலை பரீட்சார்த்திகளும் 94004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.
பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் 325 இணைப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
32 பிராந்திய சேகரிப்பு மையங்கள் உயர்தரப் பரீட்சைக்காக நிறுவப்பட்டுள்ளன.
பரீட்சார்த்தியிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், பரீட்சைக்கு தோற்ற இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரராக இருந்தால் பாடசாலை அதிபரின் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு புகைப்படங்களை செல்லுபடியாகும் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்.
தனியார் பரீட்சார்த்தியாக இருந்தால், தபால் அடையாள அட்டையைப் பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அல்லது கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு புகைப்படங்களை எடுத்துச் செல்ல முடியும்.
எவ்வாறாயினும், குறித்த விண்ணப்பதாரர்களின் பரீட்சை பெறுபேறுகள் விசாரணைக்குப் பின்னரே வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எதிர்பாராத வானிலையால் இடம்பெறும் அனர்த்தங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை குறைக்கும் நோக்கில் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அனர்த்த நிலைமைகளால் பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடையூறுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு 117 என்ற துரித இலக்கத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கை பிரிவில் நிறுவப்பட்டுள்ள தேசிய பரீட்சை அவசர நடவடிக்கை பிரிவின் 0113 668 026 இலக்கத்திற்கோ அல்லது 0113 668 032 அல்லது 0113 668 087 அல்லது 0113 668 119 ஆகிய இலக்கங்களுக்கோ தெரிவிப்பதன் ஊடாக உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
