.webp)
Colombo (News 1st) கிளிநொச்சி - பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று(04) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
காரைநகரை வசிப்பிடமாகக் கொண்ட 02 பிள்ளைகளின் தாயான 34 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
கடந்த 11ஆம் திகதி நிகழ்வொன்றுக்கு செல்வதாகக் கூறி சென்றிருந்த குறித்த பெண்ணிடம் 10 பவுண் நகைகள் இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் தலைப்பகுதி தாக்கப்பட்டிருந்தமையும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியூட்டுவதற்கான திரவம் ஊற்றப்பட்டிருந்தமையும் பிரேத பரிசோதனையில் வௌிக்கொணரப்பட்டது.
கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 16ஆம் திகதி இருவர் கைது செய்யப்பட்டனர்.
பிரதான சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியை சேர்ந்த 28 வயதான திருமணமான இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கிளிநொச்சி மாவட்ட குற்ற விசாரணை பிரிவு விடுத்த வேண்டுகோளுக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தங்க நகை அடகு வைக்கப்பட்டமைக்கான பற்றுசீட்டு, 60,000 ரூபா பணம், 16 இலட்சம் ரூபா செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட தங்க நகைகள், உயிரிழந்த பெண்ணுக்கு சொந்தமான மேலும் சில நகைகள் என்பனவும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பெண்களிடம் தங்க நகை கொள்ளையடிப்பதை செயற்பாடாக கொண்டுள்ளவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
