.webp)
-602840-550743.jpg)
Colombo (News1st) மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இம்முறை புதிய சாம்பியன் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை சாம்பியனாகாத தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகள் இம்முறை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இறுதிப்போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. 
முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாபிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
மும்பை டி.வை.பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
போட்டியிவ் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை குவித்தது.
அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை போபி லிட்ஸ்பீல்ட் (Phoebe Litchfield) 3 சிக்ஸர்கள், 17 பௌண்டரிகளுடன் 119 ஓட்டங்களை விளாசினார்.
எல்லிஸ் பெரி 77 ஓட்டங்களை பெற்றார். வெற்றி இலக்கான
339 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்தியா சார்பாக ஜெமீமா ரோட்ரிக்ஸ் மற்றும் அணித்தலைவி ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி 3ஆம் விக்கெட்டுக்காக 167 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கியது.
சதமடித்த ஜெமீமா 134 பந்துகளில் 127 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார்.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ஓட்டங்களை குவித்து வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டிய அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்தியா படைத்தது.
இந்திய மகளிர் அணி மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.
இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணியாக வரலாற்றில் இடம்பிடிக்கும்.
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை டிவி வன் அலைவரிசையூடாகவும் sirasatv.lk என்ற இணையத்தளத்திலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
