நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வேகத்தில் குறைவு

நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வேகத்தில் குறைவு

by Staff Writer 31-10-2025 | 7:14 PM

Colombo (News1st) நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ளது.

நேற்று வௌியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன தொகைமதிப்பு அறிக்கைக்கு அமைய நாட்டின் சராசரி சனத்தொகை வளர்ச்சி வீதம் பூச்சியம் தசம் 5 வீதமாகப் பதிவாகியுள்ளது.

இந்த வீதம் 2012 ஆம் ஆண்டுக்கான குடிசன தொகைமதிப்புக்கு அமைய பூச்சியம் தசம் 7 வீதமாகக் காணப்பட்டது.

இலங்கையின் சனத்தொகை குறைந்த வேகத்திலேனும் வளர்ச்சியடைந்திருப்பது இதன்மூலம் தௌிவாகியுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிசன தொகைமதிப்பு அறிக்கைக்கு அமைய நாட்டின் சனத்தொகை 1403731 பேரால் உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டின் தற்போதைய சனத்தொகை 02 கோடியே 17 இலட்சத்து 81800  ஆகும்.

இவர்களில் 51 தசம் 7 வீதமானோர் பெண்கள் என்பதுடன் ஆண்களின் எண்ணிக்கை 48 தசம் 3 வீதமாகக் காணப்படுகின்றது.

நாட்டில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தொகை 25 தசம் 2 இல் இருந்து 20 தசம் 7 வீதம் வரை 4 தசம் 5 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் தொகை 12 தசம் 6 வீதம் வரை அதிகரித்துள்ளது.

இதற்கமைய 65  வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 4 தசம் 7 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

15 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட தொகை மொத்த சனத்தொகையின் 66 தசம் 7 வீதமாகும்.

நாட்டில் தங்கியிருப்போர் வீதம் 49 தசம் 8 வீதம் வரை அதிகரித்துள்ளது.

15 வயதிற்குக் குறைந்த மற்றும் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுகளை உடைய மக்கள் தங்கியிருப் போராகக் கருதப்படுகின்றனர்.

இதனிடையே குடிசன தொகைமதிப்பு அறிக்கைக்கு அமைய நாட்டின் சிங்கள மக்கள் சனத்தொகை 74 தசம் 1 வீதமாகும்.

12 தசம் 3 வீதமானோர் இலங்கை தமிழராகவும் 10 தசம் 5 வீதமானோர் இலங்கை முஸ்லிம்களாகவும் 2 தசம் 8 வீதமானோர் இந்தியத் தமிழர் அல்லது மலையக தமிழர்களாகப் பதிவாகியுள்ளனர்.

குடிசன தொகைமதிப்பு அறிக்கைக்கு அமைய வசிப்பிடமற்ற திறந்த வௌியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 2281 ஆகும்.