தாழமுக்கம் 'மோந்தா' புயலாக வலுவடைந்தது..

வங்காள விரிகுடாவில் நிலைகொண்ட தாழமுக்கம் 'மோந்தா' புயலாக வலுவடைந்தது.. - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 27-10-2025 | 7:29 AM

Colombo (News 1st) தென்கிழக்கு, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி வலுவடைந்து வடமேல் திசையை நோக்கி நகர்ந்து 'மோந்தா' புயலாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புயல் முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே, தென்கிழக்கு தென்மேற்கு வங்காள விரிகுடாவில் சுமார் 610 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை(28) மேலும் வலுவடைந்து ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்களில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிராந்தியங்களில் மீன்பிடியில் ஈடுபடுவோர் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காற்று, மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் 18 மாவட்டங்களை சேர்ந்த 31,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

04 பாதுகாப்பு முகாம்களில் 544 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

202 பேர் தத்தமது உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 05 வீடுகள் முழுமையாகவும் 847 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.