.webp)

புறக்கோட்டையிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு உரித்தான 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணம், அங்கு பணிபுரியும் ஊழியரால் வங்கியில் வைப்பிலிடச் சென்ற வேளையில், கொள்ளையிடப்பட்டதாகக் காண்பிக்கும் வகையில் திட்டமிட்டு அந்த பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை நாரங்மினிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை களனி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு சோதனையிட்ட போதே இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த ஒருவரின் பையில் இருந்து 30 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த பணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைக்காக முச்சக்கர வண்டியுடன் அந்த நபரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வௌிக்கொணரப்பட்ட தகவல்களுக்கு அமைய, குறித்த குற்றத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் 15,00,000 ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 05 சந்தேகநபர்கள் 2,22,45,000 ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 மற்றும் 45 வயதுகளுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் 60 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் களனி பிரிவு குற்றத்தடுப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
