.webp)
Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 9392 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம, தெஹியோவிட்ட மற்றும் யட்டிநுவர ஆகிய பகுதிகளில் குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 30 பேர் கொழும்பு - திம்பிரிகஸ்யாய, வனாத்தமுல்ல மொஹமட் சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று(22) முற்பகல் 8.30 உடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் யாழ். அச்சுவேலியில் 112 மில்லிமீட்டர் அளவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனிடையே, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லிமீட்டருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இது இன்று பிற்பகல் தமிழ்நாட்டின் வட பகுதிக்கும் ஆந்திராவின் தென் பகுதியின் கடற்பிராந்தியங்கள் நோக்கியும் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.
பலத்த மழை காரணமாக களு, நில்வலா, களனி உள்ளிட்ட சில கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு குறித்த கங்கைகளின் இருமருங்கிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பலத்த மழையின் காரணமாக இராஜாங்கனை, கலாவெவ, தப்போவ மற்றும் தெதுரு ஓயா உள்ளிட்ட 15 நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நடுத்தர அளவிலான 05 நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்கின்றன.
இதனிடையே, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.