கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துக்கள் முடக்கம்

கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துக்கள் முடக்கம்

by Staff Writer 22-10-2025 | 7:08 PM

Colombo (News 1st) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவிற்கு சொந்தமான கம்பஹா கெஹெல்பத்தரவிலுள்ள காணி மற்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் முடக்கப்பட்டுள்ளன.

29 பேர்ச்சஸ் அளவிலான குறித்த காணியின் பெறுமதி 05 கோடி ரூபாவாகும்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தடுப்புக்காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோரிடம் நேற்று(21) விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு அழைத்துவரப்பட்ட பின்னர்  விசாரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் மாஅதிபரின் சிறப்பு அனுமதியின் கீழ் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பி்ட்டனர்.

இதேவேளை, கெஹெல்பத்தர பத்மேவுடனான தொடர்பு குறித்து நடிகை பியூமி ஹங்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

பியூமி ஹன்சமாலி தனது சமூக வலைத்தளத்தில் இதற்கு இன்று பதிலளித்திருந்தார்.

மேற்கோள் ஆரம்பம் 
''நான் 2022 மார்ச் மாதம் துபாயில் புதுவருட நிகழ்விற்கு ஏனைய நடிகர், நடிகைகளுடன் சென்றிருந்தேன். அங்குதான் முதன்முதலில் பத்மே என்ற நபரை பார்த்தேன். அவர் தனது மனைவி, 02 குழந்தைகளுடன் வந்து என்னுடன் நிழற்படம் எடுத்துக்கொண்டார். அப்போது தான் வெள்ளையாகவும் அழகாகவும் மாற விரும்புவதாகக் கூறினார்."
மேற்கோள் நிறைவு

அதற்காக அவருக்கு அறிவுரை வழங்கியதாக பியூமி ஹங்சமாலி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேற்கோள் ஆரம்பம்
"அவர் அதனை பாவித்திருக்கின்றார் என நான் நினைக்கின்றேன். அதனால் தான் அவர் அவ்வளவு அழகாக உள்ளார். நான் அவருடன் ஏதேனும் நிதி கொடுக்கல் - வாங்கலில் ஈடுபட்டிருந்தேனா என CID-யினர் வினவினர். எப்போதும் எனக்கு போதைப்பொருள் மூலம் கிடைக்கும் பணம், சட்டவிரோத பணம், கறுப்பு பணம் எதுவும் வேண்டாம்."
மேற்கோள் நிறைவு