பாகிஸ்தான் - ஆப்கான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

by Staff Writer 19-10-2025 | 7:09 AM

Colombo (News 1st) பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கட்டார் தோஹாவில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையின் போதே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான உடனடி போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான கூட்டு பொறிமுறையை நிறுவுவதற்கு இருநாடுகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தத்தின் நிரந்தரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கத்தார் அரசின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

நிரந்தர போர் நிறுத்தத்திற்கு முன்னதாக 48 மணி நேரத்திற்கு தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இருநாடுகளும் நடவடிக்கை எடுத்தன.

எவ்வாறாயினும், தற்காலிக போர் நிறுத்த காலப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல்களில் ​​ஆப்கானிஸ்தானின் 03 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 12 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.