.webp)
Colombo (News 1st) வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடுமென்பதுடன் இதன்போது ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கண்டி, கேகாலை, பதுளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய 07 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பசறை - ஆகரத்தென்ன பகுதியில் அமைந்துள்ள மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறும் இடத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் பசறை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.