.webp)
Colombo (News 1st) தங்காலை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தென் மாகாணத்திலுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமானதென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த போதைப்பொருட்கள் 04 படகுகளில் இலங்கை கடற்பரப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
படகுகள் கரையோர தொடர்பாடலை துண்டித்து கடற்கரைக்குள் உள்நுழைந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதுகாப்பு படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு அஞ்சி போதைப்பொருட்களை கடலில் கைவிட்டுவிட்டு படகுகளில் திரும்பியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதற்கமைய, கடலில் மிதந்தவாறு காணப்பட்ட 51 உரப்பைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
குறித்த உரப்பைகளில் இருந்து 856 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 670 கிலோகிராம் ஐஸ், 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.