''தோட்ட தொழிலாளிகளின் சம்பளத்தை அதிகரிப்போம்''

பெருந்தோட்ட தொழிலாளிகளின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்போம் - ஜனாதிபதி

by Staff Writer 12-10-2025 | 1:08 PM

Colombo (News 1st) இவ்வருடத்திற்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(12) தெரிவித்தார்.

மலையக சமூகத்தினரை மையப்படுத்தி 2,000 வீட்டு உரிமைப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

நாட்டிற்காக உழைக்கும் பெருந்தோட்ட மக்கள் நூற்றாண்டு காலமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

நீண்ட காலமாக பெருந்தோட்ட மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ள நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவை இவ்வருடத்திற்குள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து மலையக மக்களுக்கான வீட்டு உரிமைப்பத்திரங்களை ஜனாதிபதி பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுத்தார்.

இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் 4ஆவது கட்டமாக இவ்வாறு 2,000 பயனாளர்களுக்கு வீட்டு உரிமைகள் இன்றைய நிகழ்வில் கையளிக்கப்பட்டன.

"வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இணைந்து மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசாங்க பிரதிநிதிகள் குழு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.