.webp)
Colombo (News 1st) எவ்வித நியாயமான காரணமும் இன்றி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 அதிகாரிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(08) அனுமதி வழங்கியது.
இந்த மனுக்கள் மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுடன் அப்போதைய பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக இருந்த சுதத் மெண்டிஸ் மற்றும் எச்.டி.எம்.பிரேமதிலக ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஷானி அபேசேகர சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாந்த ஜயவர்தன தனது சேவைபெறுநர் எதிர்கொண்ட நிலைமைகளை விளக்கினார்.
அதன்போது அவர் முன்வைத்த சில விடயங்களே இவை..
2019 நவம்பர் மாதம் கோட்டபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக நியமிக்கப்ப்டடு 04 நாட்களுக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர தென் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபரின் பிரத்தியேக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவ்வேளையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், ஊடகவியலாளர்களாக லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, கீத் நொயார் கடத்தல், போத்தல ஜெயந்தாவின் கடத்தல் மற்றும் கொலை முயற்சி, பிரகீத் எக்னலிகொட கடத்தி கொலை, திவயின ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல முக்கியமான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஷானி அபேசேகரவின் கீழ் இடம்பெற்று வந்தன.
இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் ஷானி அபேசேகர 2020 ஜனவரி 07ஆம் திகதி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
2020 ஜூலை 31ஆம் திகதி அப்போதைய பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பொய்யான சாட்சியங்களை உருவாக்கியதாகக் கூறி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ஷானி அபேசேகர உள்ளிட்ட சிலரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
சுமார் 10 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் பின்னர் சட்ட மாஅதிபரின் ஆலோசனையின் படி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு எந்த சாட்சியங்களையும் சமர்ப்பிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு குரோத செயற்பாடு என தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாகல் செய்யப்பட்டன.
பின்னர் மனுவை தாக்கல் செய்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களான சுதத் மெண்டிஸ் மற்றும் எச்.டி.எம். பிரேமதிலக ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான ஷெஹான் டி சில்வா மற்றும் ஹஃபீல் ஃபாரிஸ் ஆகியோர் தமது சேவைபெறுநர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிற்கு வரவழைக்கப்பட்டு ஷானி அபேசேகரவிற்கு எதிராக சாட்சியமளிக்க அழுத்தம் விடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அவர்கள் அதனை நிராகரித்தமையால் எவ்வித நியாயமான காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அப்போதைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன குறித்த வழக்கில் பொய்யான சாட்சியங்களை உருவாக்கியமை தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து மனுதாரர்கள் கைது செய்யப்பட்டதாக பிரதிவாதிகள் சார்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்கிரம கூறினார்.
நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி மனுதாரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சட்டத்தரணி கூறினார்.
குரோத மனப்பாங்களில் கைதுகள் இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று தெரிவித்த சட்டத்தரணிகள், மனுதாரர்கள் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தாக குற்றஞ்சாட்டினாலும் அதை நிரூபிக்க எந்த சாட்சியமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
மனுதாரர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் சட்ட மாஅதிபர் எந்த வகையிலும் தொடர்புபடவில்லையென சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார தெரிவித்தார்.
போதுமான ஆதாரங்கள் கண்டறியப்படாததால் மனுதாரர்களை விடுவிக்குமாறு சட்ட மாஅதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
விடயங்களை கருத்தில் கொண்டு அரசியலமைப்பின் 12(1) மற்றும் 13(1) பிரிவுகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுதாரர்களுக்கு எதிராக மீறப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் 03 நீதியரர்கள் கொண்ட குழாம் தீர்ப்பளித்தது.
ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் ஜனவரி 12ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஏதேனும் எதிர்ப்புகள் இருந்தால் பெப்ரவரி 12ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டதுடன் மனு தொடர்பான விசாரணையை மே 14ஆம் திகதி மேற்கொள்ள தீர்மானித்தது.