உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

by Staff Writer 01-10-2025 | 3:19 PM

Colombo (News 1st) சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்றாகும்.

'அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

உள்ளூர் மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் முதியவர்கள் நமது அபிலாஷைகள், நல்வாழ்வு, நமது உரிமைகள் எனும் தொனிப்பெருளில் இம்முறை முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கோண்டு ​1954ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

UNICEF-இன் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின் பிரகாரம் உலகில் சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் 2.03 பில்லியன் ஆகும்.

உலகில் சுமார் ஒரு பில்லியன் சிறார்கள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.

கடந்த ஆண்டு ஐ.நா சபை வெளியிட்ட தரவுகளின்படி உலகின் சுமார் 19 வீத சிறார்கள் பலஸ்தீனம், மியன்மார், ஹைட்டி, சூடான் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட மோதல் நிலவும் நாடுகளில் வாழ்கின்றனர்.

இன்று சர்வதேச முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது.

1990ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

2030ஆம் ஆண்டு முதியோர் தொகை சர்வதேச ரீதியில் இளைஞர்களை விட அதிகமாக இருக்கும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டொன்று போனால் அகவை ஒன்று போகும் என்பது உண்மை. 

அனுபவங்களின் அமுதசுரபியாக முதியவர்கள் மட்டுமே இருக்க முடியும்.

உலக சிறுவர் தின தேசிய நிகழ்வு இன்று(01) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற தேசிய நிகழ்வு சிறுவர்களின் திறமைகளால் வண்ணமயமாக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர், டொக்டர் நாமல் சுதர்சன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிறுவர் தினத்திற்கான நினைவு முத்திரையும் இங்கு வெளியிடப்பட்டது.

இதேவேளை, தேசிய முதியோர் தின விழா பத்தரமுல்லை - சுஹுருபாயவில் நடைபெற்றது.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விழாவில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், டொக்டர் உபாலி பன்னிலகே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முதியோர்கள் சிலரும் பங்குபற்றியிருந்தனர்.

உள்ளூர் மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லும் முதியவர்கள் நமது அபிலாஷைகள், நல்வாழ்வு, நமது உரிமைகள் எனும் தொனிப்பெருளில் இம்முறை முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது.