3 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 03 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

by Staff Writer 30-09-2025 | 9:40 PM

Colombo (News 1st) பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர் இந்தியாவின் பெங்களூரு மத்திய குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவின் தேவானஹல்லி பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான இலங்கையர்கள் மூவரும் நீண்ட காலமாகவே இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். 

இரத்மலானையைச் சேர்ந்த இரேஷ் ஹங்சக, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சுகத் சமிந்து, தெவுந்தரவைச் சேர்ந்த திலிப் ஹரிஷான் ஆகிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்தின் இராமேஷ்வரத்திற்கு கடந்த வருடம் சட்டவிரோதமாக சென்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களிடமிருந்து கடவுச்சீட்டு உள்ளிட்ட செல்லுபடியான எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரேஷ் ஹங்சக என்பவர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளி என்பதுடன், சுகத் சமிந்து என்பவர் கொலை மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் இந்திய பொலிஸாரால் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.