.webp)
Colombo (News 1st) ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் நேற்று(17) நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கிடையிலான லீக் போட்டியில் சர்ச்சைக்குரிய இரண்டு விடங்கள் பதிவாகின.
ஒன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் உரிய நேரத்திற்குள் மைதானத்திற்கு வருகை தராமை,
இரண்டாவது கள நடுவரான ருச்சிர பல்லியகுருகே பந்துபட்டு காயமடைந்தமை.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் பதிவான கைகுலுக்கத் தவறிய விவகாரமே பாகிஸ்தான் அணி வீரர்கள் நேற்று மைதானத்திற்கு வர தாமதமானற்கான காரணம் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
அதாவது இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின் போது அணித்தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்ளத் தேவையில்லை என்றும் இந்திய அரசாங்கம் அதனை விரும்பவில்லை எனவும் போட்டி மத்தியஸ்தரான அன்டி பைக்ரொஃப்ட் (Andy Pycroft) கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டன.
இதனால் போட்டி மத்தியஸ்தரான அன்டி பைக்ரொஃப்ட் (Andy Pycroft) இத்தொடரிலிருந்து நீக்குமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறும் சாத்தியம் உள்ளதெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.
இவ்வாறான சூழ்நிலையில் மைதானத்துக்கு வராமல் தாமதித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியினர் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் வேண்டுகோளை அடுத்து மைதானத்திற்கு சென்றதுடன் போட்டி ஒரு மணித்தியாலம் தாமதமாகி ஆரம்பமானது.
இதேவேளை, போட்டியில் பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது அணி வீரான சயிம் ஹயுப் விக்கெட் காப்பாளரை நோக்கி எறிந்த பந்து களநடுவரான ருச்சிர பல்லியகுருகே தலையில்பட்டு அவருக்கு காயமேற்பட்டது.
சிகிச்சை பெற்றுவந்த அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றதுடன் மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.