.webp)
Colombo (News 1st) ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக அரைச்சதங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராத் கோஹ்லியை இலங்கையின் பெத்தும் நிஸ்ஸங்க முந்தியுள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் ஹொங்கொங் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஹொங்கொங் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காத நிஸாகட் கான் 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 52 ஓட்டங்களையும் அன்சி ராத் 4 பௌண்டரிகளுடன் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றி இலக்கான 150 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 26 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
குசல் மென்டிஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
என்றாலும், அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க அரைச்சதமடித்து வெற்றியீட்டும் நம்பிக்கையை கொடுத்தார்.
44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள் 6 பௌண்டரிகளுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார். இது இந்தத் தொடரில் தொடர்ச்சியாக அவர் பெற்ற 2ஆவது அரைச்சதமாகும்.
அத்துடன், ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அவர் பெற்ற 4ஆவது அரைச்சதமாகும்.
இதன் மூலம் இந்தப் போட்டிகளில் அதிக அரைச்சதங்களைப் பெற்ற வீரராக பெத்தும் நிஸ்ஸங்க பதிவானார்.
இதற்கு முன்னர் இந்தியாவின் விராத் கோஹ்லியை 3 அரைச்சதங்களைப் பெற்றதே அதிகபட்சமாக இருந்தன.
எவ்வாறாயினும், ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் விராத் கோஹ்லி 10 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கலாக 429 ஓட்டங்களைக் குவித்து இந்தப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகத் திகழ்கிறார்.
பெத்தும் நிஸ்ஸங்க 8 போட்டிகளில் 4 அரைச்சதங்களுடன் 291 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இலங்கை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.
இந்த வெற்றிக்கு அமைவாக இம்முறை ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் சுப்பர் 4 சுற்றக்கு தெரிவாகும் வாய்ப்பை இலங்கை அணி பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.