பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு நடவடிக்கை

இந்திய நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

by Staff Writer 11-09-2025 | 6:29 AM

Colombo (News 1st) இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள இந்திய மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்திற்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வட மாகாண ஆளுநரை நேற்று(10) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது இந்தியத் துணைத்தூதுவர் செவிதி சாய்முரளியும் பிரசன்னமாகியிருந்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் முல்லைத்தீவுக்கு கடந்த மே மாதம் வந்திருந்த போது பருத்தித்துறை துறைமுகம் இந்திய நிதியுதவியில் அபிவிருத்தி செய்யப்படுமென உறுதியளித்ததை ஆளுநர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், இதற்கு மாகாணத்தின் ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் என உறுதியளித்தார்.