இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்..

இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்

by Staff Writer 08-09-2025 | 12:00 PM

"டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்" எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

1965ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதியை அனைத்துலக எழுத்தறிவு தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

எழுத்தறிவின் முக்கியத்துவத்தை சமூகத்தினரிடையே வலியுறுத்தும் நோக்கில் இந்நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.

மொழியியல் பன்முகத்தன்மை, பூகோளமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி என்பனவற்றால் உலக சனத்தொகையில் 40 வீத மக்களுக்கு தமது மொழி தொடர்பான எழுத்தறிவு கிடைப்பதில்லை என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கல்வியறிவை மேம்படுத்தலுக்கு ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியில் கல்வியை பெறுவதே மிகச்சிறந்த விடயம் என யுனெஸ்கோ தெரிவிக்கின்றது.

2030ஆம் ஆண்டுக்குள் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டுமென்பதே​ தமது இலக்கு என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

அனைத்தினதும் தொடக்கப்புள்ளியாக காணப்படக்கூடிய எழுத்தறிவினூடாக மனிதன் முழுமை பெறுகின்றமை யாவருமறிந்த உண்மை.

இலங்கையின் சனத்தொகையில் 92 வீதமானோர் எழுத்தறிவு வீதத்தை கொண்டவர்கள் என்பதுடன் இது மூன்றாம் உலக நாடொன்றிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமானதாகும்.

இலங்கை, தெற்காசியாவிலேயே மிக உயர்ந்த கல்வியறிவை கொண்டு ஆசியாவில் மிகச் சிறந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ள நாடாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய செய்திகள்