இனியபாரதிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இனியபாரதிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

by Staff Writer 02-09-2025 | 7:26 PM

Colombo (News 1st) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் காணாமல் போன நபர்கள் பற்றிய வழக்கு 2016ஆம் ஆண்டு முதல் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

அதில் சந்தேகநபர்களில் ஒருவரான கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதி மாவட்ட பயங்கரவாத தடுப்புப் பணியகத்தினால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று(02) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைகளுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2004 முதல் 2006ஆம் ஆண்டு வரை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவிந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய அவரின் உதவியாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.