.webp)
Colombo (News 1st) அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் Samantha Joy Mostyn இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஸ்டெய்ன் கலையகத்திற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்திற்கு கெப்பிட்டல் மகாராஜா குழுமம் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
Samantha Joy Mostyn கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியலுடன் நவீன மற்றும் பன்முக கலாசார ஜனநாயகத்தில் தலைமைத்துவம் எனும் தலைப்பில் நேர்காணலில் பங்கேற்றதுடன் அந்த நேர்காணல் எதிர்வரும் நாட்களில் ஔிபரப்பாகவுள்ளது.
ஆளுநர் நாயகம் Samantha Joy Mostyn உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம்(06) நாட்டிற்கு வருகை தந்தார்.
Samantha Joy Mostyn அவுஸ்திரேலியாவின் அரச தலைவராகவும் ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும் செயற்படுகிறார்.
அவுஸ்திரேலிய ஆளுநரொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் சிலரையும் சந்தித்தார்.
நாளை மறுதினம்(10) வரை அவர் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதுடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நேரடி உதவித் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பண்டாரகம தேனி வளர்ப்பு மையம் மற்றும் ஹிக்கடுவ சுனாமி அருங்காட்சியகம் ஆகியவற்றையும் அவர் பார்வையிடவுள்ளார்.
காலியில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சுகாதார ஒன்றியமும் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அரச தலைவராக கருதப்படும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பிரதிநிதியாக கிரீடத்தின் அதிகாரங்கள் ஆளுநரூடாகவே செயற்படுத்தப்படுகிறது.
