தேஷபந்துவை பதவி நீக்கும் நிறைவேற்றப்பட்ட பிரேரணை..

தேஷபந்துவை பதவி நீக்கும் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு..

by Chandrasekaram Chandravadani 06-08-2025 | 8:37 AM

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

குறித்த பிரேரணை ஜனாதிபதிக்கு நேற்றிரவு(05) அனுப்பிவைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டது.

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்களிப்பிலிருந்து விலகி செயற்பட்டார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களில் 46 பேர் வாக்கொடுப்பின் போது சமூகமளிக்கவில்லை.

இவர்களில் தேசிய மக்கள் சக்தியின் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

அதேநேரம், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் வருகை தரவில்லை.

புதிய ஜனநாயக கூட்டணியின் 05 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மூவரும் வாக்கெடுப்பு நேரத்தில் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களில் சர்வஜன அதிகாரம் கட்சியின் திலித் ஜெயவீரவும் ஒருவராவார்.