.webp)
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கான பேரவையின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை மற்றும் தீர்மானம் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
2021 ஜனவரி 15-இல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான பேரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 47 உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பிலும் அதில் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அந்த கடிதத்தில் நினைவூட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 2025 ஜூன் மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது 70-இற்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகள் கையெழுத்திட்டு வழங்கிய கடிதத்தையும் கவனத்திற்கு கொண்டுவருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 மே மாதத்தில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் ஐக்கிய நாடுகளின் தோல்வி மற்றும் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் ஏற்பட்ட தோல்வி என்பன உலகெங்கிலுமுள்ள இனவெறி, சர்வாதிகார மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சிகளில் தண்டனையின்றி பெருமளவான குற்றங்களைச் செய்வதற்கு துணிச்சலைத் தருகின்றமையை நினைவூட்ட விரும்புவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் முக்கியமான 05 விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
1. போர் நிறைவடைந்து 16 ஆண்டுகளில் இலங்கையில் உண்மையான பொறுப்புக்கூறல் செயன்முறைகள் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான பேரவையின் 60ஆவது அமர்வில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட உறுப்புநாடுகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் செயன்முறையை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்.
2. இலங்கையின் புதிய அரசாங்கம் உள்ளகப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான நேரத்தையும் அதற்கான முன்னெடுப்புகளையும் முற்றாக எதிர்ப்பதோடு அரசாங்கத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்காது எனும் யதார்த்தத்தை என்பதை ஐ.நா ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் சுயாதீன அரச சட்டத்தரணிகள் அலுவலகத்தை ஸ்தாபிப்பது பொறுப்புக்கூறலை கையாள்வதற்கு போதுமானதாக இருக்காது.
3. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலய பொறுப்புக்கூறல் திட்டம் நீடிக்கப்படுவதில் ஆட்சேபனை இல்லையாயினும் அது ஒரு காலக்கெடுவிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அத்துடன் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனும் வௌிப்படையான செய்தியுடன் இணைக்கப்பட வேண்டும்.
4. செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்படும் மீள் அகழ்வாராய்ச்சியில் சர்வதேச கண்காணிப்பு, மேற்பார்வை, தொழில்நுட்ப உதவி ஆகியன அவசரத் தேவையாக உள்ளதுடன் வடக்கு, கிழக்கில் உள்ள புதைகுழிகளை முறையான மறு வரைபடமாக்குவதும் மேற்பார்வை, கண்காணிப்பிற்கான சர்வதேச அளவில் கட்டாயப்படுத்தப்பட்ட பொறிமுறையின் அவசரத் தேவையாகவுள்ளமையால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அதற்கான முக்கிய முன்னுரிமையை அளிக்க வேண்டும்.
5. இராணுவ மயமாக்கல், சிங்கள பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை இரத்துச் செய்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களை அடுத்துவரும் அறிக்கையில் உள்ளீர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தை வலியுறுத்துவதாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரசியல் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், நல்லதம்பி ஶ்ரீகாந்தா, செல்வராசா கஜேந்திரன், முருகேசு சந்திரகுமார், பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அத்துடன் 11 சமயத் தலைவர்களும் 115 சிவில் அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ள இந்த கடிதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான பேரவையின் தலைமை அதிகாரிக்கும் முகவரியிடப்பட்டுள்ளதுடன் அதன் பிரதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.