.webp)
Colombo (News 1st) திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிப்பதற்காக வழக்கு மாநாட்டை நடத்துவதற்கு மூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்பூர் கடற்கரை பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று(30) இடம்பெற்றது.
மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டமை குறித்து இன்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் தஸ்னீம் பௌசான் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்றைய விசாரணையின் போது இருதரப்பினரும் தமது தரப்பு அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்திருந்தனர்.
குறித்த மனித எச்சங்கள், நீண்ட காலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதால் அவை காயங்களினூடாக ஏற்பட்ட மரணமா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பிலும் குறித்த எச்சங்கள் குற்றத்தின் ஊடாக தொடர்புபட்ட மரணங்களா என்பதை அறிய வேண்டியுள்ளதால் அவற்றை மேலும் ஆய்விற்குட்படுத்த வேண்டியுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மயானம் இருந்ததாகவோ அல்லது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாக இருந்ததாகவோ சரியான தகவல்கள் இல்லை என தொல்பொருள் திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடயங்களை ஆராய்ந்த நீதவான், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் மேலும் அகழ்வுகளை மேற்கொள்வது தொடர்பிலும் மனித எச்சங்கள் குறித்து எவ்வாறான அறிக்கைகளை பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக வழக்கு மாநாட்டை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் 06ஆம் திகதி மாநாட்டை நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பூர் கடற்கரை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட இடத்திலிருந்து கடந்த 20ஆம் திகதி மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டன.
அதனை தொடர்ந்து மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.