.webp)
Colombo (News 1st) நீதிமன்றத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை முன்பிணையில் விடுவிக்குமாறு ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஸ இன்று(29) பிற்பகல் நீதிமன்றத்தில் சரணடைந்ததை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய வழக்கின் 35ஆவது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஸ நேற்று(28) நீதிமன்றில் முன்னிலையாக தவறியதால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடியமை, நீதிமன்றின் உத்தரவை மீறியமை, 03 ஜீப் வாகனங்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் நெடுஞ்சாலையில் தீ விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.