ரணிலின் அவசரகால சட்ட விதிமுறை ; நீதிமன்ற தீர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அவசரகால சட்ட விதிமுறைகளால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன - உயர் நீதிமன்றம்

by Staff Writer 23-07-2025 | 6:50 PM

Colombo (News 1st) 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகளால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று(23) தீர்ப்பளித்துள்ளது.

பதில் ஜனாதிபதி என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் கீழ் அமுல்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகள், தான்தோன்றித்தனமானதைப் போன்றே அதிகாரமற்றவை என தெரிவித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் குறித்த விதிமுறைகளை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர்களுக்கு வழக்கு கட்டணங்களை செலுத்துமாறும் நீதியரசர்கள் குழாம் அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பில் அதன் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான அம்பிகா சற்குணநாதன், லிபரல் இளையோர் அமைப்பு சார்பில் நாமினி தத்பிரபா பண்டித்த, சட்டத்தரணி ஆதம் லெப்பை ஆசாத், சந்துன் துடுகல ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் மூர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அங்கம் வகித்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மை இணக்கப்பட்டுடன் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் மூர்து பெர்னாண்டோ, உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட ஆகியோர் ஏகமனதாக தீர்ப்பை வழங்கியதுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர தனித்தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட, அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அவசரகால விதிமுறைகளை பிறப்பிக்க காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு தௌிவுபடுத்தவில்லை என குறிப்பிட்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம் அவசரகால விதிமுறைகளை அமுல்படுத்துவதற்கான சட்ட அடிப்படை குறித்த சந்தர்ப்பத்தில் பதில் ஜனாதிபதிக்கு ஏற்படவில்லை என நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

2022ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியை கைவிட்டு நாட்டிலிருந்து வௌியேறியதாக சுட்டிக்காட்டிய நீதியரசர், அந்த சந்தர்ப்பத்தில் பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரிணல் விக்கிரமசிங்க நாட்டில் ஏற்பட்டிருந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்திதின் கீழ் ஜுலை மாதம் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அவசரகால விதிமுறைகளை அமுல்படுத்தியதாக தெரிவித்தார்.

இந்த அவசரகால விதிமுறைகள் காரணமாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் பதில் ஜனாதிபதியின் குறித்த தீர்மானம் தான்தோன்றித்தனமானது என அறிவித்து அந்த விதிமுறைகளை இரத்து செய்யுமாறும் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதியரசர் தெரிவித்தார்.

மனுக்கள் மீதான விசாரணைகளின் போது இருதரப்பினரும் நீண்ட விளக்கங்களை வழங்கியதாக சுட்டிகாட்டிய நீதியரசர் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு அமைய பதில் ஜனாதிபதி பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம் உரிய முறையில் அவசரகால விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தியதாக குறிப்பிட்டார்.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்ட மாஅதிபர் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனைகளை நிராகரித்த உயர் நீதிமன்றம், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதும் நீதிமன்றத்தின் கொள்கை, சட்டவாட்சியை பாதுகாப்பதும் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டியது.

இருதரப்பினரும் முன்வைத்த நீண்ட விளக்கங்களை ஆராய்ந்ததை அடுத்து இந்த விதிமுறைகள் தான்தோன்றித்தனமாக பிறப்பிக்கப்பட்டவை என தீர்மானிக்கப்பட்டதாக நீதியரசர் யசந்த கோதாகொட தெரிவித்தார்.

அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகள் ஊடாக அரசியலமைப்பின் 12ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை அறிவித்த நீதியரசர் கூறினார்.

குறித்த அவசரகால விதிமுறைகளை இரத்து செய்வதாகவும் மனுதாரர்களுக்கு வழக்கு கட்டணங்களை செலுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுவதாகவும் நீதியரசர் குறிப்பிட்டார்.

மூவரடங்கிய நீதியர்சகள் குழாமில் உறுப்பினரான நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, தமது தனித்தீர்ப்பை அறிவித்ததுடன் பதில் ஜனாதிபதியின் அவசரகால சட்ட விதிமுறைகள் ஊடாக அடிப்படை உரிமைகளை மீறப்படவில்லை என தெரிவித்தார்.

நாட்டில் அந்த சந்தர்ப்பத்தில் நிலவிய நிலைமைக்கு அமைய அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி அமுல்படுத்தியுள்ளதாகவும் இதன்மூலம் எந்தவொரு வகையிலும் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை எனவும் தான்தோன்றித்தனமான செயற்பாடு இடம்பெறவில்லை எனவும் நீதியரசர் தெரிவித்தார்.

அதற்கமைய மனுதாரர்களின் அனைத்து மனுக்களையும் நிராகரிக்க வேண்டும் என நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவாமான்ன, சட்டத்தரணி கலாநிதி கிஹான் குலதுங்க, சட்டத்தரணி திஷ்ய வேரகொட, ஜனாதிபதி சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ ஆகியோர் ஆஜரானதுடன் சட்ட மாஅதிபர் சார்பில் அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணிகளான  ஷவிந்திர விக்கிரம, சம்பத் பண்டார ஆகியோருடன் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜீவ் குணதிலக்க ஆஜராகியிருந்தார்.