.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் நேற்று(20) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிடைத்த அவசர அழைப்பிற்கமைய, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒருதரப்பினர் மற்றொரு தரப்பினருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்திருந்ததாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது ஒருதரப்பினரிடமிருந்து பொலிஸார் மீது கல் வீசப்பட்ட நிலையில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இரு குழுக்களுக்கிடையே அண்மை காலமாக இடம்பெற்று வந்த தகராறு இவ்வாறு மோதலாக மாறியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து தொடர்ந்தும் வட்டுக்கோட்டை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நடமாடும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.