.webp)
Colombo (News 1st) முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, 03 மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(17) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மனுதாரர்கள் தலா 50,000 ரூபா ரொக்கப்பிணை, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகளுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிட்ட நீதவான், அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களை பெற்று அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி தூய்தாக்கல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, 03 மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 26ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
43 குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் கெஹெலிய பண்டார திசாநாயக்க ரம்புக்வெல்ல, அவரின் மனைவி குசும் பிரியதர்ஷனி ஏபா வேய்ஹேன, அவரின் மகள்களான சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, சந்துலா ரமாலி ரம்புக்வெல்ல, அமாலி நயனிகா ரம்புக்வெல்ல அவரது கணவரான இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச்சட்டத்தின் 65(1)ஆம் சரத்திற்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் அந்த சட்டத்தின் 18 அ சரத்தின் கீழ் மனுதாரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2020 ஆகஸ்ட் 13ஆம் திகதி முதல் 2024 ஜூன் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெகுசன ஊடகம் மற்றும் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய போது. சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதன் மூலம் தண்டனை சட்டக்கோவையின் கீழ் குற்றங்களை இழைத்துள்ளதாக தெரிவித்து குற்றப்பத்திரிகை ஊடாக மனுதாரர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.