இலங்கை - சவுதி அபிவிருத்தி நிதியம் இடையே இருதரப்பு கடன் திருத்த ஒப்பந்தம்

by Staff Writer 14-07-2025 | 9:25 PM

Colombo (News 1st) இலங்கையின் வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்திற்கு இடையே இருதரப்பு கடன் திருத்த உடன்படிக்கை இன்று(14) கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை அரசாங்கம் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன் சவுதி அரேபியா சார்பில் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சுல்தான் அப்துல் ரஹ்மான் ஏ அல் மர்ஷாட் உடன்படிக்கையில் கையொப்பமிட்டார்.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் சவுதி அபிவிருத்தி நிதியத்துடன் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டமை இலங்கையின் வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முக்கிய திருப்புமுனையாகும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார சவால்களால் இலங்கை வௌிநாட்டு கடனை மீளச் செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தியதன் பின்னரும் இலங்கைக்கு தொடர்ச்சியாக கடனை வழங்கியதன் மூலம் சவுதி அரேபியா முக்கிய பொறுப்பை நிறைவேற்றியது.