தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று ஆரம்பம்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று ஆரம்பம்

by Staff Writer 07-07-2025 | 11:10 AM

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் மக்களைத் தௌிவுபடுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

திடீர் விபத்துக்களால் வருடாந்தம் நாட்டில் 10,000 முதல் 12,000 -இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானோர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நாளாந்தம் சுமார் 30 பேர் பல்வேறு விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.

மக்களுக்கான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் 10 ஆவது தடவையாகவும் தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய்கள் பிரிவின் விபத்து தடுப்புப்பிரிவின் பிரதானி, சமூக வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரத்தின் 05 நாட்களும் 05 பிரிவுகளில் விழிப்புணர்வை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

முதலாவது நாளில் வாகன விபத்துகள், 2ஆம் நாளில் தொழில்சார் நிறுவன விபத்துகள், 3ஆம் நாளில் வீடுகள் மற்றும் முதியோர் இல்லங்களை அண்மித்து இடம்பெறக்கூடிய விபத்துகள், 4ஆம் நாளில் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றமை தொடர்பான விபத்துகள், 5ஆம் நாளில் சிறுவர்கள் தொடர்பான விபத்துகள் ஆகிய பிரிவுகளில் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.

இந்த விழிப்புணர்வை ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் தொடர்ச்சியாக சமூகத்தில் கொண்டு செல்வதே தமது எதிர்பார்ப்பாகும் என சுகாதார அமைச்சின் தொற்றாநோய்கள் பிரிவின் விபத்து தடுப்புப்பிரிவின் பிரதானி, சமூக வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.