.webp)
Colombo (News 1st) காலி - எல்பிட்டிய அம்பேகம ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இன்று மிக விசேடமான நாள்.
அது மாத்திரமல்ல...
நாட்டு மக்களின் தேவைகளை அடையாளங்கண்டு நாட்டை கட்டியெழுப்பும் பணியை தசாப்தம் கடந்து அயராது முன்னெடுக்கும் கம்மெத்தவிற்கு இன்று மிகச்சிறந்த நாளாகும்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்மிக்க அரசியல்வாதியுமான தாபோ ம்பெக்கி, நாளைய உலகை வெற்றிகொள்ளும் எமது நாட்டின் சிறார்களுக்கு உதவும் வகையில் இன்று கம்மெத்தவுடன் இணைந்திருந்தார்.
காலி எல்பிட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட வெலிவிட்டிய திவிதுர வலயக்கல்வி பணிமனையில் உள்ள அம்பேகம ஆரம்ப பாடசாலையில் சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
கல்வியிலும் இணைப் பாடவிதானங்களிலும் திறமையை வௌிப்படுத்தும் இந்த சிறார்களுக்கு நூலகம் இல்லாமை பல ஆண்டுகளாக நீடித்த மிகப்பெரும் குறைபாடாகும்.
அவ்வாறிருந்தாலும் பல ஆண்டுகளாக நூலகத்திற்காக ஏங்கி இந்த மாணவர்கள் கண்ட கனவு பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று நனவானது...
இவர்களின் நேர்மையான கனவிற்காக கம்மெத்த, புத்தகங்கள் நிறைந்த புதிய நூலகத்தை அமைத்துக்கொடுப்பதற்கான பணிகளை ஆரம்பித்தது.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் அழைப்பிற்கிணங்க இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெக்கியின் பங்கேற்புடன் இன்றைய நிகழ்வு நடைபெற்றது.
அம்பேகம ஆரம்ப பாடசாலையின் சின்னஞ்சிறார்களால் தாபோ ம்பெக்கி மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார்.
மிக விரைவில் நிறைவேறவுள்ள இந்த சிறார்களின் நூலக கனவுக்கான அடிக்கல்லை தாபோ ம்பெக்கி நாட்டினார்.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் கம்மெத்த தலைவர் ஷெவான் டெனியல், அம்பேகம ஆரம்ப பாடசாலையின் அதிபர் எஸ்.கே.சமன் சந்தன மற்றும் எல்பிட்டிய வலயக்கல்வி பணிப்பாளர் புபுது மலவர ஆரச்சி ஆகியோரும் இதில் இணைந்திருந்தனர்.
கம்மெத்த பொதுநிநிதியின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் இந்த நூலகத்திற்கு "தாபோ ம்பெக்கி நூலகம்" என பெயர் சூட்டப்படவுள்ளது.
இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சென்டில் ஷோல்க், இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான இரண்டாம் செயலாளர் ஷெனெதெம்பா ட்ஷாஞ்ஜலா, தாபோ ம்பெக்கி அறக்கட்டளையின் பிரதம நிறைவேற்றதிகாரி மெக்ஸ் பொக்வானா, பிரதம செயற்பாட்டு அதிகாரி லுகானியோ நீர், ம்பெக்கியின் பிரத்தியேக செயலாளர் எலன் பிள்ளை உள்ளிட்டோரை அம்பேகம ஆரம்ப பாடசாலையின் மாணவச் செல்வங்கள் மிக உற்சாகமாக வரவேற்றனர்.
MTV பிரதம நிறைவேற்று அதிகாரியும் கம்மெத்த பிரதி தலைவருமான யசரத் கமல்சிறி, கம்மெத்த பொதுச் செயலாளர் பிரசன்ன அத்துகோரள, கம்மெத்த சர்வதேச தொடர்பாடல் பிரதானி அனுஷ்கா லெவ்கே மற்றும் கம்மெத்த பிரதிநிதிகளான கயான் சம்பத், கந்தவேள் மயூரன், நிரேஷ் இளையதம்பி உள்ளிட்டோரும் இதன்போது இணைந்திருந்தனர்.
இன்றைய நிகழ்வின் போது தாபோ ம்பெக்கிக்கு பாடசாலை அதிபரால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.