.webp)
Colombo (News 1st) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான வின்சென்ட் பீடர்ஸ்(Winston Peters) மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த ஜனாதிபத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் பெற்ற விசேட வெற்றிகளுக்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்திற்கு நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களின் வாழ்த்துகளை தெரிவித்த பிரதி பிரதமர் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவதே தமது அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் நடைபெற்று வரும் சாதகமான முன்னேற்றங்கள் தொடர்பில் மகிழ்ச்சியை தெரிவித்த நியூசிலாந்து துணை பிரதமர் அரசியல் ஸ்தீரத்தன்மை, பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் சமூக மேம்பாட்டுக்கான புதிய அரசாங்கத்தின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.
நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்வதில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தை பாராட்டிய நியூசிலாந்தின் துணை பிரதமர் இந்த வேலைத்திட்டம் இலங்கை நிலையான அபிவிருத்தியை அடைய உதவுமென நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவியை மேலும் விரிவுபடுத்த நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்
நியூசிலாந்து துணை பிரதமர் வின்சென்ட் பீட்டர்சனின் விஜயம் இலங்கை - நியூசிலாந்து உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.
மக்களிடையே நீண்ட காலமாக நிலவிய பிளவுகள் நீண்ட கால மோதல்களுக்கு வழிவகுத்துள்ளதென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன் நல்லிணக்க செயற்பாட்டின் முக்கிய தூணாக தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு தமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக தெரிவித்தார்.