.webp)
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபர் பிரதம நீதியரசரிடம் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் மஹேன் வீரமன், அமாலி ரணவீர, பிரதீப் அபேரத்ன ஆகியோர் அடங்குகின்றனர்.
குறித்த குழுவிலிருந்து நீதிபதி மஹேன் வீரமன் விலகுவதாக அறிவித்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்தது.
அவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி மஹேன் வீரமன் நீதிபதிகள் குழாத்திலிருந்து விலகுவது தொடர்பில் பிரதம நீதியரசருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்தது.
தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.