ஜூலையில் மின் கட்டண திருத்தம் - ஜனாதிபதி

ஜூலையில் மின் கட்டண திருத்தம் - ஜனாதிபதி

by Staff Writer 03-05-2025 | 4:55 PM

Colombo (News 1st) எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிக்கிறார்.

சிரச டிவியில் நேற்றிரவு ஔிபரப்பான 'சட்டன' அரசியல் நேர்காணலில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை உறுதிப்படுத்தினார்.

வருடத்தின் முதல் 6 மாதங்கள் வரட்சியானதாகவும் அடுத்த 6 மாதங்கள் மழையுடன் கூடிய மாதங்களாகவும் இருக்குமென  அடிப்படையாகக்கொண்டு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுவது வழமையான செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைவாக விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜூலை மாதம் அறிவிக்கப்படுமெனவும் தேர்தலுக்காகவோ அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்காகவோ மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாது என்றும் ஜனாதிபதி கூறினார்.

தற்போதைய நிலையில் மின்சார சபை இலாபத்தில் இயங்கினாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட 220 பில்லியன் எனும் பாரிய கடன் இன்றும் தொடர்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடந்த டிசம்பரில் மின் கட்டணம் குறைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் ஜூலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமானால் அது பாரிய விலை அதிகரிப்பாக இருக்காதெனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் வலுசக்தி சுயாதீனத்தன்மை இழக்கப்படமாட்டாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை அந்நாட்டின் அரசாங்கத்தினால் மாத்திரமே மேற்கொள்ள முடியுமென்ற சரத்துடன் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மின் கட்டண திருத்தம், வலுசக்தி, பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக போலியான அச்சத்தை நாட்டுக்குள் ஏற்படுத்த பலர் முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.