விரைவில் குற்றப்பத்திரிகை - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

பாரியளவிலான மோசடி சம்பவங்கள் தொடர்பில் விரைவில் குற்றப்பத்திரிகை - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

by Staff Writer 02-05-2025 | 9:07 AM

Colombo (News 1st) கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான 15 ஊழல் மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசாரணை செய்யப்படாத முறைப்பாடுகளில் காணப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் மிகவும் சிக்கலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.

கடந்த காலத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 300 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் அவர்களது அரசியல் நண்பர்கள் பலர் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.