.webp)
Colombo (News 1st) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.
இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொதுமக்கள் இம்முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள்நேய ஆட்சியின் கீழ் நாடும் சமூகமும் ஆழமான, சாதகமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமது சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இன, மத வேறுபாடின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் செயற்பட்டனர்.
மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு வருவதாக ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கையை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட முன்வருமாறு சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்கு கொண்டுவந்து ஒரு வெற்றி ஆண்டில் ஒரு மக்கள் அரசாங்கத்தின் கீழ் 139ஆவது சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
75 ஆண்டுகளாக ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்துநின்று ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் அரசாங்கத்தின் கீழ், இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது ஒரு வரலாற்று மைல்கல்லை குறிப்பதாகவும் பிரதமர் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
குழுவாதம், அரசியல் பக்கச்சார்புகள் மற்றும் உறவினர்களுக்கு சலுகை அளித்தல் போன்றவற்றால் அநீதிக்குள்ளான உழைக்கும் மக்கள் 2024ஆம் ஆண்டில் இந்த முழு அரசியல் கலாசாரத்தையும் தலைகீழாக மாற்றும் ஒரு சவாலான முடிவை எடுத்ததாகவும் இது படுகுழிக்கு இழுத்துச்செல்லப்பட்டிருந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான துணிச்சலான நடவடிக்கையாகும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள்நேய அரசாங்கமாக மக்களின் தேவைகளை மிகச்சரியாக அடையாளம் காணவும் சீர்குலைந்த பாதையில் பயணித்துக்கொண்டிருந்த பொருளாதார, அரசியல், சமூக, கலாசார மற்றும் சட்ட கட்டமைப்பை சரியான பாதைக்கு மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக இந்த நாட்டை பாதித்துவரும் ஊழலையும் அநீதியையும் ஒரே இரவில் மாற்ற முடியாது என்றாலும் அரசாங்கம் படிப்படியாக எல்லாவற்றையும் நெறிப்படுத்தி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்து வருகின்றது.
வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டை கட்டியெழுப்ப உறுதியுடன் ஒன்றிணைந்து உழைப்போம் எனவும் மே தின வாழ்த்துச் செய்தியூடாக பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.