.webp)
COLOMBO (News1st) காட்டு யானைகள் ரயிலில் மோதுவதை தவிர்ப்பதற்காக ஏ.ஐ. (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உபகரணமொன்றை பரிசோதிப்பதற்கு போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் குறித்த உபகரணம் பொருத்தப்பட்ட ரயிலொன்று கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் டொக்டர் ப்ரசன்ன குணசேன தெரிவித்தார்.
பரிசோதனையின் பின்னர் மட்டக்களப்பு மார்க்கத்தில் இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களிலும் குறித்த உபகரணம் பொருத்தப்படவுள்ளது.
ரயில்களில் மோதுண்டு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 09 யானைகள் உயிரிழந்துள்ளன.
மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தின் கல்ஓய மற்றும் பளுகஸ்வெவ இடையிலான பகுதியில் 20 கிலோமீற்றர் அளவிலான பிரதேசத்தில் யானைகள் ரயிலில் மோதுவதற்கான அதிக அளவு அபாயம் காணப்படுவதாக பிரதியமைச்சர் டொக்டர் ப்ரசன்ன குணசேன தெரிவித்தார்.
இதனைக் குறைப்பதற்காக புதிய உபகரணத்தை எஞ்ஜினில் பொருத்தி, இரவு நேரங்களில் ரயிலை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பேராசிரியர் லிலந்த சமரநாயக்க உள்ளிட்ட தரப்பினரால் இந்த உபகரணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி தரிந்து வீரகோன், நலீன் ஹரிஸ்சந்திர மற்றும் பேராசிரியர் காமினி திசாநாயக்க உள்ளிட்ட சிலரும் இதில் பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.