Colombo (News 1st) பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று(04) உத்தரவு பிறப்பித்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்தமன் சூரசேன, ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக தேர்தல் திகதியை ஜனாதிபதி உரிய முறையில் நிர்ணயித்துள்ளதாக சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
1988ஆம் ஆண்டின் தேர்தல் திருத்தச் சட்டத்தின் 10ஆவது பிரிவிற்கு அமைய, தேர்தலை நடத்த உத்தேசிக்கப்படும் திகதி, வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவடையும் தினத்தில் இருந்து கணக்கிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு தற்போது தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதன் காரணமாக, மனுதாரரின் கோரிக்கையை வழங்க முடியாதுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்தில் கூறினார்.
இந்த விடயங்களை கவனத்திற்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்ட மாஅதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
பொதுத் தேர்தலை நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம், அரசியலமைப்பிற்கு முரணானதென தீர்ப்பளிக்குமாறு கோரி கடந்த 21ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாகவே, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.