.webp)
Colombo (News 1st) எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.
நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை மீனவர்கள் நால்வரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் - கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களே ஒரு படகுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை, மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மீனவர் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் அச்சமின்றி கடற்றொழிலை முன்னெடுக்க மத்திய மற்றும் தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மீனவர்கள் பிரச்சினை தொடர்பில், இலங்கை விஜயத்தின் போது வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்ஷங்கர் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக மீனவ சங்கத்தின் பொதுச்செயலாளர் போஸ் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்திய இழுவைமடி மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ். மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய துணைத்தூதரகம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஏழு மீனவர் சங்க பிரதிநிதிகள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை இந்திய துணைத்தூதுவரிடம் கையளித்தனர்.