.webp)
Colombo (News 1st) பாரிய மனிதாபிமான பிரச்சினைகளுக்கு மத்தியிலுள்ள காஸா மக்களுக்கு அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான புதிய செயற்றிட்டமொன்றை (Aid Delivery System) கலாநிதி அன்ட்ரூ ஃபொரஸ்ட் (Dr. Andrew Forrest) முன்வைத்துள்ளார்.
பாலி செயன்முறையின் 2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வர்த்தக மாநாட்டிற்காக இலங்கை வந்துள்ள கலாநிதி அன்ட்ரூ பொரஸ்ட் CNN தொலைக்காட்சியின் நேரடி நிகழ்ச்சியொன்றில் அந்த செயற்திட்டம் தொடர்பில் நேற்று (12) பிற்பகல் தௌிவுபடுத்தியுள்ளார்.
மோதல்களால் காஸா பகுதியில் நான்கு இலட்சம் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியுறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
காஸா பெருநிலப்பரப்பிற்கு தேவையான உணவு உள்ளிட்ட பிற பொருட்களைத் தரைவழியாக வழங்க புதிய அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என ஜோர்தான் மன்னர் அண்மையில் அறிவித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவின் செல்வந்த வர்த்தகர் கலாநிதி அன்ட்ரூ ஃபொரஸ்ட் அதற்கேற்ப தானியங்கி விநியோக செயன்முறை தொடர்பில் செயற்திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.
நுழைவு வாயில்களினூடாக தானியங்கி ஸ்கேனிங் இயந்திரங்கள் ஊடான ஆய்வு செயன்முறை மூலம் மனிதத் தலையீடின்றி காஸாவுக்கு பொருட்களை அனுப்புவதே இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
ஒரு பாதுகாப்பு நுழைவாயிலுக்கு 20 மில்லியன் டொலர்கள் செலவாகும் எனவும், இந்த திட்டத்தின் முழுச் செலவையும் தான் ஏற்பதற்கும் தயாராக உள்ளதாகவும் கலாநிதி அன்ட்ரூ ஃபொரஸ்ட் தெரிவித்துள்ளார்.