யாழ்.பல்கலைக்கழக மருத்துவப்பயிற்சி கட்டடம் திறப்பு

யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பயிற்சி கட்டடத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

by Bella Dalima 24-05-2024 | 5:26 PM

Colombo (News 1st) யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத் தொகுதி  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (24) திறந்து வைக்கப்பட்டது.

942 மில்லியன் ரூபா செலவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் 8 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடத் தொகுதி 6000 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.

இதில் மருத்துவக் கற்கை நெறிக்கான விரிவுரை, பரீட்சை மண்டபங்கள், கேட்போர்கூடம் மற்றும் மருத்துவத்திறன் விருத்தி ஆய்வுகூடங்கள் ஆகியன காணப்படுகின்றன.

சத்திரசிகிச்சை அறைகள், மீட்பு அறைகள், சத்திர சிகிச்சை கழிவுகளை அகற்றும் பகுதிகள், கிருமித் தொற்றகற்றும் அறைகள், சத்திரசிகிச்சை ஆயத்த அறைகள் மற்றும் மருத்துவக் களஞ்சிய சேமிப்பு வசதிகள், பணியாளர் உடை மாற்றும் அறைகள், நோயாளர் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட பல வசதிகளும் இந்த புதிய கட்டட தொகுதியில் காணப்படுவதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிராந்திய ஒத்துழைப்பு மையமும் இங்கு ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய ஆராய்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், மருத்துவ கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த பிராந்திய ஒத்துழைப்பு மையம் ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் P.S.M. சார்ள்ஸ்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான M.A.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ். மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், மாகாண பிரதம செயலாளர், ஏனைய அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.