இன்றும் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை

by Staff Writer 23-05-2024 | 5:57 AM

Colombo (News 1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும்(23) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச்சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மாகாணங்களில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்படுமெனவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலையால் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு, பதுளை, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.