சிரசாநமாமி சிரச வெசாக் வலயம் இன்று(23) ஆம்பம்

சிரசாநமாமி சிரச வெசாக் வலயம் இன்று(23) ஆம்பம்

by Staff Writer 23-05-2024 | 5:57 AM

Colombo (News 1st) 'சிரசாநமாமி' சிரச வெசாக் வலயம் இன்று(23) பிற்பகல் 3.30 தொடக்கம் பக்தர்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்றும்(23) நாளையும்(24) சிரச தலைமையக வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள, புத்த பகவானின் புனித சின்னங்கள் உள்ளிட்ட ஏனைய புனித சின்னங்களை வழிபடுவதற்கான வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைக்கவுள்ளது.

கூரகல ரஜமகா விகாரையில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பகவானின் புனித சின்னங்கள் கொழும்பு - 2, பிரேபுரூக் பிளேஸிலுள்ள சிரச வெசாக் வலயத்திற்கு இன்று(23) பிற்பகல் 2 மணியளவில் கொண்டுவரப்படவுள்ளன.

இதேவேளை, கொழும்பு மாளிகாகந்த அக்ரஷ்ராவக்க மகா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்த பகவானின் பிரதம சீடர்களான செரியுத் மற்றும் முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்களும் வெசாக் பூரணை தினமான இன்று, பிற்பகல் 3 மணியளவில் ஊர்தி பவனியில் சிரச வெசாக் வலயத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன.

தொல்பொருள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள தொல்பொருள் கண்காட்சியும் இம்முறை சிரச வெசாக் வலயத்தில் நடைபெறவுள்ளது.

ஶ்ரீ லங்கா பொலிஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை என்பன இம்முறை சிரசா நமாமி வெசாக் வலயத்துடன் கைகோர்த்துள்ளன.

புத்த பெருமானின் பிறப்பு, பரிநிர்மாணம் மற்றும் இறப்பு ஆகிய மூன்று பரிணாமங்களையும் நினைவுகூரும், வெசாக் பூரணை தினம் இன்றாகும்.

அரண்மனையிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் வயோதிபர், நோயாளி, பூதவுடல், துறவி எனும் 4 காட்சிகளை கண்டு வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்த இளவரசர், இராஜ போகங்களுக்கு விடைகொடுத்து இன்று போன்றதொரு வெசாக் பூரணை தினத்தில் ஞானம் பெற்றார்.

உலக மக்களுக்கு நிலையற்ற தன்மையை உணரச்செய்த புத்த பகவான் இதேபோன்றதொரு நாளில் பரிநிர்வாணம் அடைந்தார்.

புத்த பகவானின் இலங்கைக்கான மூன்றாவது விஜயம் வெசாக் பூரணை தினத்தில் இடம்பெற்றதால் இலங்கை மக்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

வெசாக் பூரணை தினத்தில் களனிக்கு வருகைதந்த புத்த பகவான், சமன் தேவனின் அழைப்பை ஏற்று சிவனொளிபாத மலையில் கால்தடம் பதித்ததாகவும் நம்பப்படுகிறது.