இலங்கை மக்களுக்கு மோடி மீதே நம்பிக்கை உள்ளது

இலங்கை மக்களுக்கு நரேந்திர மோடி மீதே பாரிய நம்பிக்கை உள்ளதாக பா.ஜ.க தமிழக பொதுச்செயலாளர் கருத்து

by Bella Dalima 23-05-2024 | 4:05 PM

Colombo (News 1st) இலங்கை மக்களுக்கு நாட்டின்  ஜனாதிபதி, பிரதமர்களை காட்டிலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மீதே பாரிய நம்பிக்கையும் மரியாதையும் உள்ளதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர் The Hindu பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இதனை கூறியுள்ளார்

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே அமைக்கப்படும் பாலத்தினூடாக முழு இலங்கைக்கும் மறுவாழ்வு கிடைக்கும் என 
பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதனால்   பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியதாக   The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த பாலத்தினூடாக   வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் மறுவாழ்வு கிடைக்கும் என பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இந்த திட்டம் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவதுடன், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 10 வருடங்களில் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளதை நினைவுகூர்ந்த  ராம சீனிவாசன், இலங்கை மக்களுக்கு தமது ஜனாதிபதி பிரதமர்களை காட்டிலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மீதே பாரிய நம்பிக்கையும் மரியாதையும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.