நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்; பயணி பலி

நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்; பயணி ஒருவர் உயிரிழப்பு

by Bella Dalima 21-05-2024 | 8:37 PM

Colombo (News 1st) லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். 

லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸின் SQ 321 போயிங் 777-300ER என்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால், விமானம் உடனடியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனிடையே, உயிரிழந்த பயணி பிரித்தானிய பிரஜை என தகவல் வௌியாகியுள்ளது. 

SQ 321 விமானம் வங்காள விரிகுடாவைக் கடந்த சில நிமிடங்களில், அதன் பயண உயரத்திலிருந்து 6,000 அடி (1,800 மீ) கீழே இறங்கியதாக விமான கண்காணிப்பு தரவு தெரிவிக்கிறது.

விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்ததாக விமான நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வானிலையில் ஏற்பட்ட மாற்றம் விமானம் குலுங்கக் காரணமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.