ஈரான் ஜனாதிபதியை பலிகொண்ட ஹெலிகொப்டர் விபத்து

ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு ; கடமைகளை பொறுப்பேற்கிறார் துணை ஜனாதிபதி

by Staff Writer 20-05-2024 | 1:22 PM

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹி உள்ளிட்டவர்களும் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஈரானிய வௌிவிவகார அமைச்சு இன்று(20) காலை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ஹுசெய்ன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்டவர்கள் அசர்பைஜான் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள 2 நீர்ப்பாசனத் திட்டங்களை  திறந்துவைப்பதாக நேற்று(19) அங்கு சென்றிருந்தனர்.

திறப்புவிழாவில் கலந்துகொண்ட பின்னர் ஈரானின் வடமேற்கு நகராகிய Tabriz க்கு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

தொடரணியாகப் பயணித்த  3 ஹெலிகொப்டர்களில் ஒன்றான ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் ஈரானின் வடபகுதியில் கடும் பனிமூட்டத்திற்குள் சிக்கி சிரமத்திற்குள்ளாகி விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், மற்றைய 2 ஹெலிகொப்டர்களும் எவ்வித பிரச்சினையும் இன்றி பயணித்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. 

அசர்பைஜான் எல்லையில் வர்சாகன் எனும் இடத்திலுள்ள மலைப்பாங்கான பகுதியில் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முற்றாக சேதமடைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மக்கள் விழித்திருந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

மக்கள் முழந்தாளில் இருந்து பிரார்த்தனை செய்யும் நிழற்படங்களும் வௌியாகியிருந்தன.

நேற்று(19) மாலையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ள போதிலும் இன்று காலை வரை சம்பவ இடத்தை அடைய முடியாதிருந்தது.

ரஷ்யா, அசர்பைஜான், ஆர்மேனியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கை மோசமான வானிலையால் தடைப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று(20) காலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த துருக்கியின் ட்ரோன் ஒன்று வெப்பமான பகுதியொன்றை முதலில் கண்டறிந்தது.

அதனை ஆதாரமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே விபத்து சம்பவித்த இடம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினர் அவ்விடத்தைச் சென்றடைந்தனர்.

விபத்துக்குள்ளான ஹெலி முழுமையாக எரிந்துள்ளதுடன் அதில் பயணித்த எவரும் உயிரோடிருக்க வாய்ப்பில்லையென செம்பிறைச் சங்கம் உடனடியாக அறிவித்திருந்தது.

இதன் பின்னரே ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் வௌியிட்டுள்ளனர்.

இந்த விபத்து திட்டமிட்ட செயலாக இருப்பதற்கான ஆதாரமெதுவும் இல்லையென அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செனற்சபை உறுப்பினரொருவர் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஈரானின் ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி பதவியேற்றிருந்தார்.

மதகுருவான இவர் ஈரானின் அடுத்த ஆன்மீகத் தலைவராகத் தெரிவாகுவதற்கான சாத்தியமிருந்ததாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மாஸா அமினி என்ற பெண் பொலிஸ் தடுப்புக்காவலில் இருக்கும் போது உயிரிழந்ததையடுத்து அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தன.

1980 களின் இறுதிப் பகுதியில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை விதித்த இரகசிய தீர்ப்பாயத்தில் இவரும் அடங்கியிருந்தார்.

இந்தத் தண்டனை விதிப்பு  மனித குலத்துக்கு எதிரான மாபெரும் குற்றமென மனித உரிமை குழுக்கள் தற்போதும் ரைசி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

ஈரானிய அரசியலமைப்பின் அடிப்படையில் நோய்நிலைமைகள், மரணம், குற்றப்பிரேரணை அல்லது பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஜனாதிபதியால் அவருக்குரிய கடமைகளை ஆற்ற முடியாமல் போகுமிடத்து துணை ஜனாதிபதி ஜனாதிபதிக்குரிய கடமைகளை ஆற்றுவாரென்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரம் தற்போது துணை ஜனாதிபதியாகவுள்ள மொஹமட் மொஹ்பார் ஜனாதிபதிக்குரிய கடமைகளை ஆற்றவுள்ளார்.