தமிழர்களுக்காக அமெரிக்க காங்கிரஸில் பிரேரணை

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸில் பிரேரணை

by Staff Writer 18-05-2024 | 3:44 PM

Colombo (News 1st) தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்காக அமெரிக்கா பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமொன்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலே நிக்கலினால் (Wiley Nickel)  அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும், நிலையான தீர்வை அடைந்து கொள்வதற்கும் பொதுஜன வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு வலியுறுத்துவதுடன், மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு ஆதரவளித்து, கடந்தகால மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்துகின்றது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏற்று, தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியமை, 1983 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கான 6 ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்கள் தமது சுதந்திரத்திற்காக வாதிடும் திறன் மட்டுப்படுத்தப்பட்டமை, 1987 இல் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டமை  உள்ளடங்கலாக தமிழர்களின் அரசியல் போக்கை நிர்ணயித்த முக்கிய வரலாற்று நிகழ்வுகளும் குறித்த தீர்மானத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், தமிழர் தாயகப் பகுதிகளில் பெரும்பாலானவை இராணுவமயமாக்கப்பட்டுள்ளதுடன், பொறுப்புக்கூறல் நீதி மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் இன்னும் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எட்டப்படவில்லை என அந்த தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழர்களுக்கு எதிரான கடந்தகால மீறல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்குரிய போதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுடான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்துவதுடன் இந்திய பசுபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்பவற்றை முன்னிறுத்தி, அமெரிக்கா அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கவும், அவற்றுக்காக வாதிடவும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பொன்றை அமெரிக்கா நடத்த வேண்டும்  எனவும் குறித்த தீர்மானத்தில் பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.