ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரும் விடுதலை

by Bella Dalima 17-05-2024 | 6:26 PM

Colombo (News 1st) கம்பஹா - ரத்துபஸ்வலவில் குடிநீர் வழங்குமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ  மேஜர் ஜெனரல் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகமின்றி நிரூபிப்பதற்குத் தவறியுள்ளமையினால், கம்பஹா மேல் நீதிமன்ற  நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

2013 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களாக இடம்பெற்ற அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கையின் மீது ஒகஸ்ட் முதலாம் திகதி இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர். 

இதன்போது, பாடசாலை மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

கம்பஹா - நாதுன்கமவிலுள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து வௌியேறும் கழிவுகளினால் நிலத்தடி நீர் அசுத்தமடைகின்றமையினால், குறித்த தொழிற்சாலையை அகற்றுமாறும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்குமாறும் கோரியே மக்கள் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். 

இந்த தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யுமாறு சட்ட மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக, ரத்துபஸ்வல சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.